யாழ். நெடுந்தீவு அபிவிருத்திக்கு 2,000 மில்லியன் ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு
யாழ். நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 1500-2000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று (05) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
எரிபொருள் நிலையம்
அபிவிருத்திப் பணிகளுக்காக 1500 - 2000 மில்லியன் ரூபாய் வரை அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. நெடுந்தீவில் 40மில்லியன் ரூபாய் செலவில் நிரந்தரமாக எரிபொருள் நிலையமொன்றை அமைக்கவுள்ளோம்.

நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிறுவ நாம் கோரிய போது எவ்விதமான இலாப நோக்கமும் இன்றி பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினர் சம்மதித்தனர்.
இன்று அதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றுள்ளது. இப்பணிகளை நவம்பர் மாதம் முடிக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தக்காரர்களிடம் இத்திட்டத்தை செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள் முடிக்குமாறு நான் கோரியுள்ளேன்.
கட்டட பணிகளுக்கு தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் உதவிகளை கடற்படையினரும் பிரதேச செயலகமும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், விரைவில் பணிகளை முடித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என அவர்களிடமும் கூறியுள்ளேன்.
சுற்றுலாவை மேம்படுத்தல்
நெடுந்தீவு மக்களின் கல்வி, சுற்றுலா, மீன்பிடி உள்ளிட்ட ஏனைய துறைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். இதுதவிர 2025ஆம் ஆண்டில் வடக்கு வீதி அபிவிருத்திக்காக 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2025ம் ஆண்டில் வடக்கு பகுதியின் மொத்த அபிவிருத்திக்காக 13 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2026ஆம் ஆண்டில், இதனை விட அதிக நிதி வடக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 60 மாத காலத்துக்கு மக்கள் அதிகாரத்தை தந்துள்ளனர். அதில் தற்போது 20 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 20 மாதங்களுக்குள் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
இனவாத, மதவாதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |