பின்னோக்கி நகரும் இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் கடும் அதிருப்தி
அரசாங்கம் வரிசை யுகத்தை உருவாக்கி நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார்.
பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“பசுமை விவசாயத்திற்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ள போதிலும் இதில் அங்கத்தவர்களாக பதினான்கு உறுப்பினர்கள் உள்ளனர். அதில் விவசாயத்துறையில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ள நிபுணர்களோ, துறை சார்ந்தவர்களோ இல்லை.
சம்பந்தப்பட்ட செயலணி அளிக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. துறைசார்ந்தவர்கள் இல்லாத செயலணியாக இருக்கும் இந்தச் செயலணிக்கு இந்த நாட்டில் வரி செலுத்துவோரின் பணம் ஏன் ஒதுக்கப்பட்டது? 14 பேர் கொண்ட கும்பலால் இந்த நாட்டில் விவசாயம் தொடர்பில் முடிவெடுக்க முடியுமா?
தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம் தொடர்பான தொலைநோக்குப் பார்வை எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவு செலவுத் திட்டம் அபிவிருத்திக்கான ஒரு வரவு செலவுத் திட்டமல்ல.
இது மக்களை வெல்ல வைக்க வந்த அரசாங்கம், வரிசை யுகத்தை உருவாக்கிய வண்ணம், நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதாக” அவர் கூறினார்.