மே மாதம் வானில் இடம்பெறவுள்ள அற்புத நிகழ்வு!
வருடாந்தம் விண்வெளியில் நிகழும் அற்புதமான நிகழ்வுகளில் ஒன்றான ‘ஏட்டா அக்வாரிட்ஸ்’ (Eta Aquarids) விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உச்சமடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.
பிரபலமான ‘ஹேலியின் வால்மீன்’ (Halley's Comet) விட்டுச் சென்ற சிதைந்த விண்வெளித் துகள்கள் ஊடாக பூமி பயணிக்கும் போது இந்த விண்கல் மழை உருவாகிறது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
விண்கல் மழை
ஏப்ரல் 18 முதல் மே 27 வரை இக்காலம் நீடித்தாலும், மே 06 ஆம் திகதியே விண்கற்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மே 6 ஆம் திகதி அதிகாலை 2:00 மணிக்குப் பின்னர் விண்கற்களைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் கிழக்கு அடிவானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த நிகழ்வைக் காணலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் வானம் தெளிவாகவும் இருட்டாகவும் இருக்கும் பட்சத்தில், ஒரு மணித்தியாலத்திற்கு 40 முதல் 85 விண்கற்கள் வரை தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்ப ராசி மண்டலத்திலிருந்து இந்த விண்கற்கள் தெறிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதால் இது ‘ஏட்டா அக்வாரிட்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
செயற்கை ஒளி மாசுகள் இல்லாத, கட்டிடங்கள் மறைக்காத திறந்தவெளிப் பகுதிகளில் இந்த விண்கல் மழையை மிகத் தெளிவாகக் கண்டு இரசிக்கலாம் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்