சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளம்
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் அல்லது மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தமது பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு ஆங்கிலத்தில் சரியாகப் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், தோற்றவுள்ள பாடங்கள், மொழிமூலம், பால் நிலை, தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட விபரங்களையும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது முகவரியையும் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கால அவகாசம்
அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக இம்மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, பாட மாற்றம், மொழிமூல மாற்றம், பால் நிலை மாற்றம், புதிய பாடங்களைச் சேர்த்தல், தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட ஏழு வகையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |