மறக்க முடியாத அலைகள்: பல்வேறு பகுதிகளில் சுனாமி பேரழிவின் நினைவேந்தல்
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இலங்கையெங்கும் நினைவு கூறப்படுகிறது.
இந்த பேரழிவில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து கடற்கரை பகுதிகளில் அமைதியான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
சுனாமி பேரழி
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இலங்கையில் மட்டும் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத துயர நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
மூதூர்
சுனாமி அனர்த்தத்தின் 21வது வருட ஞாபகார்த்த தினமும், உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்கான பிரார்த்தனையும் மூதூர் -தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.
மூதூர் ஈராக் விளையாட்டுக்கழகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டிய விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.
அதேவேளை சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் 286 பேர் உயிரிழந்திருந்தனர்.



செய்தி - புஹாரிஸ்
யாழ் - உடுத்துறை
21 - வது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் இன்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.
சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து, பொது ஈகைச் சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



செய்தி - கஜி, எரிமலை, லின்ரன்
கட்டைக்காடு
21 வது சுனாமி நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து தேசிய கொடியினை முள்ளியான் கிராம அலுவலர் ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


செய்தி - எரிமலை
கிளிநொச்சி
சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் ,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறைமா அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



செய்தி - கபில்
தம்பலகாமம்
சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் (26) 21 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.
இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.



செய்தி - ரொஷான்
திருகோணமலை
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நோக்கிலும், பேரழிவு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.



செய்தி - தொம்ஸன்
வவுனியா
சுனாமி பேரவலத்தின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஏற்றி வைத்திருந்தார்.
இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.



செய்தி - கபில்
மட்டக்களப்பு
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



செய்தி - ருசாத்
மன்னார்
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று (26) காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



செய்தி - நயன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |