படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஐ.பி.சி. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் படுகொலைளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை நீதி வழங்கப்படாத நிலையில், சர்வதேச சமுகமே அதற்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது, ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
ஆயுததாரிகள் அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில், அவரது படுகொலையுடன் தொடர்புடைய ஆறு பேரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீதி மறுக்கப்பட்ட நிலையில் அவரது 21 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை 11.30 அளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார்.
அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும் அவரது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, 21 சிட்டிகளில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



