அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
புதிய இணைப்பு
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இன்று (18) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.
சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்
அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.
நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |