காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர் கண்டுபிடிப்பு : வெளியான அறிவிப்பு
இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (23) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்தன
பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800 பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 7,726 பேருக்கு அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்
அவர்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும், மட்டக்களப்பில் 3 பேரும், கம்பஹாவில் 2 பேரும், திருகோணமலையில் ஒருவரும், அனுராதபுரத்தில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8