25,000 ரூபா இலஞ்சம் -20 வருட கடூழிய சிறை
25,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் இந்த தண்டனையை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
சுற்றாடல் அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக

பேருவளை உள்ளுராட்சி சபையின் பயாகல அலுவலகத்தில் சுற்றாடல் அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக நபரொருவரிடம் 25,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கே மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இலஞ்சமாக பெற்ற 25,000 ரூபாவை தண்டப்பணமாக வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
மற்றுமொரு சம்பவம்

இதேவேளை, மத்துகம பிரதேச பொறியியல் அலுவலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதவான் நீதிமன்றில் முன்னிலை

புகார்தாரரால் முடிக்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான சிட்டைகளை தயார் செய்து, அலுவலகம் பரிந்துரை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அலுவலர், ரூபாய் ஐயாயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் மத்துகம காவல் நிலையத்திற்கு அருகில் இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.