வெளிநாடுகளில் உள்ள சந்தேக நபர்களை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் : டிரான் அலஸின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் 30 பேர் வெளிநாடுகளில் இருப்பதாக சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தரப்பினர் டுபாய் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை சட்டப்படி கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசேட வேலைத்திட்டம்
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுக்கும் தரப்பினரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்படும் தரப்பினரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டுபாய் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அந்தந்த நாடுகளுடன் ஏற்கனவே தாம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டிரான் அலஸின் உறுதி
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும், எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்துவதாக டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |