கிளிநொச்சியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருவேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (29) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மூவர்

அதன்படி, கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கல்லாற்றுப் பகுதியில் இருந்து அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிப் பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகள் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 11 முதிரை மரக்குற்றிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் காவல்துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 03.08.2023 அன்று தடயப் பொருட்களுடன், கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.