மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர்கொல்லி போதைப்பொருள் மீட்பு
மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் ஹொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த 1 கிலோ 12 கிராம் ஹொக்கைன் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஸ்ர காவல்துறை அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக 9 பேர் அடங்கிய குழுவினர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
30 மில்லியனுக்கும் அதிக பெறுமதி
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் - தாழ்வுபாடு பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.
உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் மற்றும் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.