36 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!
அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டதன் நினைவே வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினமாகும்.
வீரமுனை எனும் தமிழ் கிராமம்
வரலாற்றுப் பாரம்பரியமிக்க வீரமுனை எனும் தமிழ் கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1945 முதல் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டு வந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஆனி முதல் ஆவணி வரையிலான காலத்தில் மிகக்கொடூரமான இன அழிப்பைச் சந்தித்தன.

கொண்டவெட்டுவான் இராணுவ முகாம் படையினரும் ஆயுதமேந்திய முஸ்லீம் குழுக்களும் இணைந்து வீரமுனை கோயிலில் தஞ்சமடைந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களைப் பிரித்தெடுத்து, சுட்டும் உயிருடனும் தீயிலிட்டுக் கொன்றனர்.
இதிலிருந்து தப்பியோடி காரைத்தீவு பாடசாலை அகதி முகாமில் தஞ்சம் புகுந்த தமிழர்களையும் விசேட அதிரடிப் படையினர் விட்டுவைக்காமல், அங்கு புகுந்து இரு கட்டங்களாக 23 இளைஞர்களைக் கைது செய்து கொன்றொழித்தனர்.
அகதி முகாமிலிருந்து விரக்தியுடன் சொந்த ஊர் திரும்பிய பெண்கள் மீது மல்வத்தை பகுதியில் மிருகத்தனமான பாலியல் வல்லுறவுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஊர்காவற்படையினரின் தாக்குதல்
ஆவணி மாதத்தில் சிங்கள மற்றும் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் தாக்குதல்கள் உச்சமடைந்து, தமிழ் மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு கிணறுகளிலும், சவளைக்கடை இராணுவ முகாமிற்கு முன்னாலும் வீசப்பட்டனர்.
மேலும், கிராமங்கள் முழுமையாக தீயிடப்பட்டு 25 பேர் எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டதோடு, அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 30 காயமடைந்த தமிழர்களும் தூக்கிச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
நீதியற்ற முறையில் தொடர்ச்சியாக நடந்த இத்தகைய இன அழிப்புச் சம்பவங்கள் மனித மனங்களை ரணங்களாக்கின.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |