இந்திய நாடாளுமன்ற ஊழியர்களில் 400 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
இந்தியாவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற ஊழியர்களில் 402 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் பரவல் கடந்த டிசம்பர் 2ம் திகதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஒமிக்ரோன் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் பரவியிருக்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8 ஆம் திகதி வரையில் 1,409 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.