இலங்கையில் மருந்துகளை விநியோகிக்கும் 40,000 பேர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
நுண்ணுயிர் கொல்லிகள்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "கிருமிகளிடையே மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) தொடர்பில் இந்நிலைமை காணப்படுகிறது. இதற்கான பிரதான காரணம் இலங்கையில் நுண்ணுயிர் கொல்லிகளின் பாவனை மிக அதிகமாக உள்ளமையாகும்.

முதலாவது காரணம், நோயாளிகள் வீடுகளிலிருந்தபடியே நோய்களுக்காக நுண்ணுயிர் கொல்லிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது காரணம், அவர்கள் வைத்தியர்களிடம் சென்று எமக்கு நுண்ணுயிர் கொல்லிகளை வழங்குமாறு கோருகின்றனர்.
மூன்றாவதாக, மக்கள் இவ்வாறான மருந்துகளைக் கேட்பார்கள் என்றும், இதனை வழங்கினால் நோய் விரைவில் குணமாகும் என்றும் கருதி வைத்தியர்களும் அடிக்கடி நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வைத்தியசாலைகளில் இவ்வாறு நடைபெறுவதில்லை.
மருந்தகங்களில் வேலை செய்பவர்கள்
அடுத்ததாக, இலங்கையில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாதவர்கள் மருந்துகளை வழங்குகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்களிடமிருந்து நிச்சயமாக நுண்ணுயிர் கொல்லிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறே தொடர்ந்தால், எதிர்காலத்தில் மருந்துகள் எதுவுமே நோய்களுக்குக் பயனற்றதாகும் நிலைமை ஏற்படும்.

இவ்வாறு மருந்து வழங்குபவர்களில் முதலாவது பிரிவினர் எவ்விதத் தகுதியும் அற்றவர்கள். அதாவது, வைத்தியக் கல்லூரிப் பக்கமே செல்லாமல் மருந்தகங்களில் வேலை செய்து, மருந்துகளை அடையாளம் கண்டுகொண்டு மருந்து வழங்கும் நபர்கள். அவ்வாறான ஒரு கூட்டமும் உள்ளது.
சட்டத்தின் பிரகாரம் மேலைத்தேய மருந்துகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மாத்திரமே என்பதை நாம் அறிவோம்.
அவர்களைத் தவிர வேறு யாரேனும் வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லிகளைப் பரிந்துரைப்பார்களாயின், அது குறித்து நாம் சமூகத்தில் பாரதூரமாகக் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இஸ்லாத்திற்கு எதிரான இறைநிந்தனை பௌத்த மதத்துடன் ஒத்துப்போகாது! ஞானசார தேரருக்கு நீதிமன்றில் கடும் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |