பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது
பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
பிரான்ஸின் தென்மேற்கு பகுதி
பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, ''ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தத் தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லாண்டெஸ் (Landes) பிராந்தியத்தில் புதிய காட்டுத்தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லுக்லோன் (Luglon) பகுதியில் 525க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 10 மணி நேரம் முன்