இருவேறு வழக்கு : பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு : மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நாமல் ராஜபக்ச
100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) நிராகரித்தது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கறிஞர்கள், அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த பிணை மனு மீதான உத்தரவை நிராகரித்து, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போது 100 மில்லியன். ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு வழக்கிலும் விளக்கமறியல்
அத்துடன், சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக அவரை நேரடியாக சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

இதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வேர்க் சதுக்கத்தை 'கிரிஷ் ட்ரான்ஸ்வேர்க் கொழும்பு' தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும்போது 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கின் அடிப்படையில் அவரை எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |