மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாநகர சபை தீயணைப்புபடை பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
50 லட்சம் பெறுமதியான பொருட்கள்
இருப்பினும் தீயணைப்பு படை பிரிவு வருவதற்கு முன்னரே பூட்டி இருந்த வீட்டிலே உள்ளிருந்த மின்சார உபகரணங்கள் விலை உயர்ந்த வீட்டின் தளபாடங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளன. இதனால் சுமார் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாய் உள்ளன.
கட்டிடத் தொகுதியில் முதலாம் மாடியில் வீட்டின் உரிமையாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இந்த மின் கசிவு காரணமாக தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து சம்பந்தமாக மட்டக்களப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தற்போதைய அதிக உஷ்ண காலகட்டங்களில் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |