நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
கடந்த கால விடயங்களுக்கான உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் எதிர்காலத்தில் மனித உரிமைகளை வலுவாக பாதுகாப்பதன் மூலமே நீடித்த சமாதானம், நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என ஜேர்மன் நாட்டின் பிரநிதி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 54 வது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சார்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்பு சட்டம்
“மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புகூறல் விடயங்களை நாம் மீள உறுதி செய்கின்றோம்.
குறிப்பாக நாட்டின் வடக்கில் பேச்சுகளுக்கான அண்மைய முயற்சிகள், நில சுவீகரிப்பு இடைநிறுத்தம் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஆகவே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
அந்த வகையில் உள்நாட்டு யுத்தம் தொடர்பான அதிபரின் உண்மையை கண்டறியும் பொறிமுறை முயற்சியை நாம் கருத்தில் கொண்டுள்ளோம்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குமாறும், சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளுக்கு இணங்க மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றோம்” என வலியுறுத்தியுள்ளார்.