ஐ.நாவில் நட்பு நாடுகளும் சிறிலங்காவுக்கு அழுத்தம்
சிறிலங்கா அரசாங்கம் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதுடன், நல்லிணக்க செயன்முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து இணை அனுசரணை நாடுகள் சார்பாக உரையாற்றிய பிரித்தானியப் பிரதிநிதி, நிலைமாறு கால நீதிக்குரிய நகர்வுகள் அர்த்தமுள்ளதாக நகர்த்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சிறிலங்கா மீது அழுத்தமான கருத்து
அவர் மேலும் குறிப்பிடுகையில், “காணிப் பிரச்சினை, அதிகாரப் பகிர்வு தொடர்பாக முக்கியமான உறுதிமொழிகளை அண்மையில் வழங்கியுள்ளது.
இந்தச் செயற்பாடுகளை அர்த்தமுள்ள நடவடிக்கைகள் ஊடாக நிறைவேற்ற சிறிலங்காவை நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.
நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
நீதிக்கான உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
51/1 தீர்மான நடைமுறை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஆயத்தமாக இருக்க வேண்டும்” - என்றார்.
இதே போலவே, சிறிலங்கா மீதான அழுத்தமான கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் முன்வைத்திருந்தனர்.