ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு அடுத்த வாரம் ஆரம்பம் : அறிக்கையும் அன்றே வெளியிடப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வு ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதேவேளை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது அமர்வுகள் ஆரம்பிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதி முற்பகல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த அறிக்கை, பிற்பகலில் ஊடாடும் உரையாடலுக்கு முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பதில் அறிக்கை
இந்த அறிக்கையின் நகல் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில் நாளைய தினம்(05) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வைத்து இலங்கையின் பதில் அறிக்கை வெளியாகவுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், இன நல்லிணக்கச் செயற்பாடுகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல், மாகாண சபைகளை வலுப்படுத்துதல், காணி சீர்திருத்தங்கள், கைதிகள் விடுதலை மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இது கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கையில் “ஜனநாயக இடம்“ சுருங்குவது பற்றிய தீவிர அக்கறை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.