முல்லைத்தீவில் கனமழையால் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 2327 குடும்பங்களைச் சேர்ந்த 6916 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 412 குடும்பங்களைச் சேர்ந்த 1215 பேர் மழை சற்று குறைவடைந்து வெள்ளநீர் வடிந்தோடிய நிலையில் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஏழு இடைத்தங்கல் முகாம்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைத்தங்கல் முகாம்கள்
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் நேற்று (21) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் புளியங்குளம் பொதுநோக்கு மண்டபம், கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலை, கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை, முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், பேராறு தமிழ் வித்தியாலயம், மன்னாகண்டல் அ.த.க பாடசாலை, கொக்குதொடுவாய் வடக்கு முன்பள்ளி என்பவற்றில் குறித்த 7 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கான நிவாரண உதவி
தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்துவருகின்றது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் அத்தியாவசிய பொருட்கள், உலருணவு பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |