பாகிஸ்தானில் கோர விபத்து!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துக் குறித்து மேலும் தெரிய வருகையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அந்த காரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 7 பேர் பயணம் செய்துள்ளனர். இரவு நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரவு நேரம் என்பதால் இந்த விபத்துக் குறித்து யாருக்கும் தெரியவில்லை. மறுநாளான நேற்று ஆற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படுவது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மீட்புக்குழுவினர் காரை மீட்டுள்ளனர். ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.