அனுமதி பத்திர கோரிக்கைக்கு கடற்றொழிலாளர்களிடம் 7 இலட்சம் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிகள்
மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் சில உத்தியோகத்தர்கள் படகு உரிமையாளர்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து தலா 35,000 ரூபாய் வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்டகால கோரிக்கை
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக சுருக்கு வலையைப் பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடித்து வருவதாகவும், இதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையமான நாரா (NARA) நிறுவன அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொண்டதாகவும், கடற்றொழிலாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கு சுருக்கு வலையைப் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்காக சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எனினும், 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், நாரா நிறுவனம் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும், கடற்படை அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப் பத்திரங்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கப்படாமல் இருந்துள்ளது.
பின்னர் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் 50,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டதாகவும், அந்தத் தொகையை வழங்க முடியாது என படகு உரிமையாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 35,000 ரூபாய் வழங்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |