சட்டவிரோத T-56 துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..!
சட்டவிரோதமான T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்த 75 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, பிங்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (27) பிங்வத்தை காவல் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை, காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமான T-56 ரக துப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, 13 உயிருள்ள தோட்டாக்கள், 11 பயிற்சித் தோட்டாக்கள், இரும்பு வாள் ஒன்று மற்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிங்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் குறிப்பிடப்படும் ஹதாதுர தமித் தர்ஷன சில்வா அல்லது 'பிங்வத்தை பொடி சுதுவா' என்பவரின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நதீக்க என்ற நபருடனும் சந்தேகநபர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பிங்வத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |