முல்லைத்தீவில் 9 கடற்றொழிலாளர்கள் கைது: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேருக்கு விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஒன்பது கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புக்களில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மிக தீவிரமாக சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கான அணி ஒன்று செயற்பட்டு வருகின்றது.
கைது நடவடிக்கை
அந்த வகையில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் ஆகியோர் இணைந்து அண்மைய நாட்களாக மிக தீவிரமாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றையதினம் (09.04.2025) அதிகாலை கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகள் மற்றும் வலைகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று (08) மற்றும் நேற்று முன்தினம்(07) ஆகிய தினங்களில் இவ்வாறு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
