8 ஆண்டுகளாக காணாமல் போன தனது மகனை தேடும் தந்தை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற இவர், அதன் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அவர் காணாமற்போனமை தொடர்பாக 10.03.2018 அன்று பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தினர் கவலை
காணாமற்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரையில் அவரது கையடக்கத் தொலைபேசி இயங்கியதாகவும், அந்தக் காலப்பகுதியில் பலர் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

எனினும், அந்த உரையாடல்களில் காணாமற்போன செல்வராசா அருந்தவச்செல்வன் நேரடியாகப் பேசியதாகத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தனது கணவர் காணாமற்போனமை தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமது உறவினரின் நிலைமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவர் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் அல்லது அவரது இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு (077 432 3487) குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை... 44 நிமிடங்கள் முன்