பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை…
எந்தவொரு இனத்திலும் சமூகத்திலும் அதன் பண்பாட்டுக்கூறுகள், அவற்றின் இருப்புக்கு ஆதாரமானவை. பண்டிகைகள் மக்களின் பண்பாட்டுச் செழுமையையும் தொன்மையையும் எடுத்துரைப்பதுடன் வாழ்வியலையும் எடுத்துரைக்கின்றன.
பாரம்பரியமான வாழ்வியல் முறைகளில் இருந்து இன்றைய உலகம் விடுபடத் துவங்குவதில்தான் பல்வேறு சிதைவுகளும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன.
உலகில் செழுமை மிக்க பண்பாட்டைக் கொண்டவர்கள் தமிழர்கள். மொழியாலும் இனத்தாலும் தனித்துவமான நெடிய நீண்ட பண்பாடும் வரலாறும் தமிழ் இனத்தின் அடையாளமாக மிளிர்கின்றது.
பண்பாட்டை மறக்கலாமா...
பண்பாட்டை மறந்த எந்தவொரு இனமும் இந்த பூமிப் பந்தில் நிலைத்ததில்லை. பண்பாடு என்பது ஒமூ சமூகத்தின் நிலைத்த அடையாளம். தொடர்பாடல், உளவியல், அடையாளம், மானுடவியல், நாகரிகம் என பல்வேறு கூறுகள் நிறைந்த பண்பாடு கால மாற்றங்களின் போதும் கால வளர்ச்சிகளின் போதும் மாறாமல் நிலைத்து நிற்கின்ற தனித்துவ இயல்பை கொண்டது.
அது மாத்திரமில்ல, பண்பாடு ஒரு சமூகத்தின் ஒரு இனத்தின் வாழ்வியலை முழுமைப்படுத்துகின்ற ஒரு அறிவியலாகத்தான் ஆதிகாலத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நாட்கள் நகர்ந்தாலும் ஈழத்தில் தமிழ் ஆண்டுப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்கின்ற பண்பாடு காணப்படுகின்றது.
எத்தகைய போர்க் காலத்திலும் எறிகணைகள், குண்டு மழைக்கு மத்தியிலும் புதிய மண் பானை வைத்து பொங்கி சூரியனுக்கு படைத்துவிட்டு இடம்பெயர்கின்ற மக்கள் எமது மக்கள்.
இயற்கையை வணங்குதல்
பொங்கல் என்பது இரண்டு விதத்தில் முக்கியத்தும் பெறுகின்றது. அது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மாண்பையும் எடுத்துரைக்கின்றது. தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுகின்றவர்கள். அத்துடன் பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்ற கருணை கொண்டவர்கள்.
தைப்பொங்கலின் போது, பொங்கி சூரியனுக்கு படையல் செய்கிறோம். இந்த உலகம் சிறப்பாக நகர வேண்டும் எனில் இயற்றை சீராக இருக்க வேண்டும். இன்றைக்கு மனிதர்கள் இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து, இயற்கை சீற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். பேரழிவுகள் இதனால் ஏற்படுகின்றன.
இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையை பேணினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது என்ற படிப்பினையை பொங்கல் பண்டிகை உணர்த்துகிறது.
தமிழ் மக்களின் பண்பாட்டில் இயற்கையைப் பேணி வணங்குகின்ற செயற்பாடுகள்தான் நிறைந்திருக்கின்றன. இயற்கையை பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களும் அறிவியலும்தான் தமிழ் மக்களின் வணக்க முறைகளின் பண்பாட்டு அம்சங்கள் எனலாம். அதில் முதன்மையானது தைப்பொங்கல் ஆகும்.
ஈழத்தில் பொங்கல் எப்படி? என்பதுதான் தமிழகத்தில் உள்ளவர்களதும் புலம்பெயர்ந்த மக்களதும் முக்கிய விசாரிப்பு. ஈழத்தில் வீட்டுக்கு வீடு இன அழிப்பு போரின் பலவிதமாக பாதிப்புக்கள். போரில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், சிறுவர் இல்லங்களிலும் தெருக்களிலுமாக உள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்கள் ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பலையாகவும் தெருக்களில் இருந்து போராடுகின்றனர். சிறைகளில் அரசியல் கைதிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் கணவர் வருவார், அப்பா வருவார் என்று காத்திருக்கும் பெண்களும் குழந்தைகளும் இன்னொரு புறத்தில் துயர வாழ்வு வாழ்கின்றனர்.
புலிப் பொங்கல்
இவர்களின் வீடுகளில் பொங்கல் எப்படி இருக்கும்? இந்த மக்களின் பொங்கல் துயரப் பொங்கல்தான். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு வாழ்வை ஈழ மக்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ மலர்வதைப் போலவே ஈழ மக்கள் தமது பண்பாட்டு பண்டிகைகளையும் அனுசரித்துச் செல்கின்றனர்.
2009இற்கு முன்னரான காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்களத்திலும் பொங்கல் செய்வார்கள். விடுதலைக்கான பொங்கலாக போராட்டம் நடந்த காலத்தில் புலிக் கோலமிட்டு, புதிய பானை வைத்து போர்க்களத்தில் பொங்கி தமிழ் பண்பாட்டை காத்தனர் விடுதலைப் புலிகள்.
இலங்கை அரசும் அதன் படைகளும் சிங்களப் பிக்குகளும் பொங்கல் நிகழ்வை தடைசெய்யும் வகையில், பல்வேறு முயற்சிகளை கடந்த காலத்தில் மேற்கொண்டமையை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக ஈழச் சைவ ஆலயங்களில் பொங்கல் பொங்கும் போது அவற்றை குழப்பிய கசப்பான சில நிகழ்வுகளும் இடம்பெற்றள்ளன. சைவ ஆலயங்களை ஆக்கிரமிக்க முயல்கின்ற நில ஆக்கிரமிப்பாளர்கள், அந்தக் கோயிலின் வழிபாடுகள், பண்பாடுகளையும் தடுக்க முனைகின்றமை மிகப் பெரிய பண்பாட்டு உரிமை மறுப்பும் மீறலும் ஆகும்.
இன்னல்கள் தீருமா...
இனியாவது தமிழர்களின் வாழ்வில் இன்னல்கள் அகல வேண்டும் என்று வேண்டியபடி பொங்குவோம். ஈழ மண்மீது உண்மையான வெளிச்சம் படர வேண்டும் என்று பொங்கி சூரியனுக்கு படையல் இடுவோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீள வீடு திரும்ப வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாய் சிறையில் வாழ்பவர்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் இறைஞ்சி பொங்குவோம்.
பசுக்களுக்குகூட பொங்கி, வழிபட்டு, உணவுட்டும் பண்பாட்டை கொண்ட தமிழ் இனம், இன்று சிறைகளிலும் தெருக்களிலும் வாடிக் கொண்டிருக்கின்றது. உரிமையை இழந்து, பண்பாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்றது.
விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தையும் இனியெமது பண்பாடு ஆக்குவோம். அழிவுகளின் மத்தியிலும் பண்பாட்டுக் கூறுகளை கைவிடாதவர்களாய் வாழ்வோம். எமது இனத்தின் மொழி, பண்பாடு, நிலம், உயிரினங்கள் என்று அனைத்தையும் எத்தகைய சூழலிலும் பாதுகாத்து விடுதலையை வென்றெடுப்போம்.
பண்பாட்டு வழியிலும் போராட வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில், பொங்கலைக்கூட ஒரு ஆயுதமாக பண்பாட்டு எழுச்சியாக பொங்க வேண்டும். குமுறும் எமது மனங்கள் போல எத்தனை துயரத்தின் மத்தியிலும் பொங்கல் பானையும் பொங்கட்டும்.
சூழ்ச்சிகளை வெல்வோம்
இத்தனைக்குப் பிறகும், ஈழத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் மீண்டெழத் துடிக்கிறார்கள் என்றால், அவர்களின் இயற்கையைப் போற்றி, வாழ்கின்ற பண்பாட்டை கொண்டவர்கள் என்பதும் ஒரு காரணம்தான்.
தமிழர்களின் தெய்வங்களும் வணக்க முறைகளும் அதன் மனிதாபிமானம் மற்றும் கருணை என்பனவும் இந்த உலகிற்கு மேன்மையான ஒரு பண்பாடாகத்தான் சேகரமாகியுள்ளது. புதிய காலம் பிறக்கும் என்பது உலகப் பொதுமக்களின் நம்பிக்கை. தமிழர்கள் அதை பொங்கலில் இருந்து தொடங்குகின்றனர்.
உலகிற்கு இயற்கையை வழிபடவும் விலங்குகள்மீது நேயம் கொள்ளவும் கற்றுக்கொடுத்த ஒரு இனம், தம்மீது மேற்கொள்ளப்பட்ட நேயமற்ற ஒடுக்குமுறைக்கான நீதியையையும் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு பொங்கல் காலம் வரும் என நம்புவோம்.
ஈழத் தமிழ் மக்களை சுற்றி பல்வேறு சூழ்ச்சிகளை பின்னுகின்ற இன்றைய கால கட்டத்தில், உலகத் தமிழர்கள் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். பண்டிகைகள் அடிப்படையில் புதிய உணர்வையும் விழிப்பையும் தருபவை.
இமாலயப் பிரகடனம் என்று ஒரு புற நகர்களும் அதிபரின் வடக்கு விஜயங்களும் காலச் சிக்கல்களின் வெளிப்பாடாகும். வரும்காலம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைத் தர வேண்டும். அதற்கான செயல்களை ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் ஆற்றுதல்தான் நம் வாழ்வும் போராட்டமுமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 January, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.