யானை மீது மோதிய வாகனம் : இருவர் பலி
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியிலிருந்து நாவுல நோக்கி பயணித்த சிறிய பாரவூர்தி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக நாவுல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மொரகஹகந்த - வதுருமுல்ல பிரதேசத்தில் இன்று (5) காலை இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், விபத்துக்குள்ளான பாரவூர்தி சாரதி உட்பட ஒன்பது பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே வந்த காட்டு யானை மீது மோதியதில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பாரவூர்தியின் பின்புறத்தில் பயணித்த இருவர் படு காயமடைந்து, கொங்கஹவெல தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சாரதி தப்பியோட்டம்
விபத்தில் காயமடைந்த ஏனைய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் பின்னர் இந்த பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக நாவுல காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |