அம்மன் வழிபாடுக்கு உகந்த ஆடி மாதம்: மங்கள பலன்களை அள்ளித் தரும் விரதங்கள்
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் தட்சிணாயன புண்ணியகாலம் பிறக்கவுள்ள ஆடி மாதத்தில்(தமிழ் முறைப்படி) ஆரம்பிக்கிறது.
இந்த காலப்பகுதியில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் மற்றும் காற்றும் மழையும் அதிகமாக இருக்கும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், சிறப்பு வாய்ந்தததாக இந்துக்கள் மத்தியில் கருதப்படுகிறது.
ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
அம்மன் கோவில்கள்
இந்த மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் நடைபெறும்ஃ மேலும், இம்மாதம் அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.
இம்மாதத்தில் மற்றுமொரு சிறந்த நாள்தான் ஆடி அமாவாசை விரதம்.
ஆடி அமாவாசையில் குடும்பத்தின் நலனுக்காக முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.
ஆடி பெருக்கு
இது ஆடி 18 என்று இந்துக்களால் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.
அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். மேலும், ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் ஆரம்பிப்பார்கள் இதன்படியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உருவாகியுள்ளது.
ஆடி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய விரதங்கள் மற்றும் வழிபாடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
1. ஆடி அமாவாசை விரதம் மற்றும் வழிபாடு:
ஆடி அமாவாசை திதி, மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில் காலையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அன்னதானம் வழங்குவது சிறப்பு.
மேலும், பித்ரு தோஷம் நீங்கவும், முன்னோர்களின் ஆசி பெறவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
2. ஆடி வெள்ளிவிரதம் மற்றும் வழிபாடு:
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூ, பழம், மாலை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யப்படுகிறது. பலர் வெள்ளி அன்று விரதம் இருந்து, அம்மனுக்கு நெய்வேத்தியமாக பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படைப்பர்.
மேலும், செல்வம், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலனுக்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடிப்பூரம்
3. ஆடிப்பூரம் மற்றும் வழிபாடு:
ஆடி பூரம் ஆண்டாள் திருநக்ஷத்திரமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
விஷ்ணு கோயில்களில் இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்வர்.
இதில் ஆண்டாளின் அருளைப் பெறுவதற்கும், ஆன்மீக உயர்வுக்காகவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
4. ஆடி கிருத்திகைவிரதம் மற்றும் வழிபாடு:
ஆடி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வேல் வழிபாடு நடைபெறும். பக்தர்கள் விரதம் இருந்து, முருகனுக்கு பால், தேன், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வர்.
இன்றைய தினத்தில் முருகனின் அருளால் தடைகள் நீங்கவும், வெற்றி பெறவும் இந்த விரதம் உதவுகிறது.
5. ஆடி பெருக்குவிரதம் மற்றும் வழிபாடு:
ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடி பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று, நீர் வழிபாடு செய்யப்படுகிறது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்யப்படுகிறது.
இயற்கையை போற்றுவதற்கும், வளமான வாழ்க்கைக்காகவும் இந்த நாள் முக்கியமானது.
வரலட்சுமி விரதம்
6. வரலட்சுமி விரதம் மற்றும் வழிபாடு:
ஆடி மாதத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகள், மஞ்சள் கயிறு அணிவித்தல், மற்றும் நெய்வேத்தியங்கள் செய்யப்படுகின்றன.
பெண்கள் இந்த விரதத்தை கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப செல்வத்திற்காகவும் அனுஷ்டிப்பர்.
செல்வம், செழிப்பு மற்றும் குடும்ப நலனை வேண்டி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான உடைகள் அணிந்து, பூஜை செய்ய வேண்டும். பூஜையில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள், பழங்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.
விரத நாட்களில் பலர் உப்பு இல்லாத உணவு அல்லது பழங்கள் மட்டும் உண்பர். சிலர் முழு உபவாசமாக இருப்பர்.
குறித்த நாட்களில் அம்மனுக்கு உகந்த மந்திரங்களான லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சப்தசதி, அல்லது முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை ஜபிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
