வடக்கில் லட்சக்கணக்கான ஏக்கர் காணி விடுவிப்பு - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு
வன்னி மாவட்டத்திலே 101,762.75 ஏக்கர் (ஒரு இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு புள்ளி எழுபத்தைந்து ஏக்கர்) நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் வன பாதுகாப்பு இடங்களாக கிட்டத்தட்ட 30 இடங்களை அடையாளம் கண்டு அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம்
இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாயநிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சனை காணப்பட்டது. இதன் காரணமாக குறித்த திட்டத்தை இங்கே நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது.
அமைச்சரவை மட்டத்தில் தீர்மானம்
நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே 101,762.75 (ஒரு இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு புள்ளி எழுபத்தைந்து ஏக்கர்) நிலங்களை மக்களுக்கு விடுவிக்க இருக்கிறோம்.
அதிலே வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் (இருபத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று நான்கு புள்ளி நாற்பது ஏக்கர்) நிலமும் மன்னார் மாவட்டத்தில்178,82.8 ஏக்கர் (பதினேழாயிரத்து எண்ணூற்று எண்பத்தி இரண்டே புள்ளி எட்டு ஏக்கர்) நிலமும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48.532.6 ( நாற்பத்தெட்டாயிரத்து ஐநூற்று முப்பத்தி இரண்டு புள்ளி ஆறு ஏக்கர்) ஏக்கர் நிலங்களையும் விடு விக்கப்பட இருக்கின்றது.
ஆனால் இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சனைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம்.
எனவே அதனையும் தீர்க்கும் முகமாக அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம்.
விசேட குழு
அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி, வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்களாக ஒரு விசேடமான குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம்.
வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
