முன்னாள் எம்பி டயானா கமகேவை கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை (Diana Gamage) கைது செய்வதற்கான ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் (High Court of Sri Lanka) நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.
எனினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) ஸ்ரீபாலி வளாகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை
இந்நிலையில், இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
டயானா கமகேவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பின் பிரதி உத்தியோகபூர்வமாக கிடைத்த பின்னர், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறையிட குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் (Department of Immigration and Emigration) தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கமைய, இதுவரைகாலம் டயானா கமகே பெற்ற எம்.பிக்கான ஊதியம் , இராஜாங்க அமைச்சருக்கான ஊதியம், கொடுப்பனவுகளை அவரிடமிருந்து அறவிடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |