கரூர் சம்பவம்: த.வெ.க பொதுச் செயலாளரை கைது செய்ய நடவடிக்கை!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தனிப்படை காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பல கோணங்களில் விசாரணை
இந்நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், கரூர் வேலாயுதம் பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேர்ந்த துயர சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
