ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்
நாட்டில் டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த மோசமான நிகழ்வு
இது குறித்து கருத்து வெளியிட்ட மசாடோ கண்டா, "இந்த அழிவுகரமான அனர்த்தங்களால் ஏற்பட்ட துயரங்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன்.

உயிர்களைக் காப்பாற்றவும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கும் என இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கின்றேன்.
இந்த மோசமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்க நாங்கள் குறித்த அரசாங்கங்களுடன் இணைந்து விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய பசுபிக் அனர்த்த நிவாரண நிதியம்
இந்த மானியங்கள் அவசரகால மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். இயற்கை இடர்களால் ஏற்படும் பாரிய அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளின் போது உயிர்காக்கும் நோக்கங்களுக்காக வளரும் உறுப்பு நாடுகளுக்கு விரைவான மானியங்களை வழங்கும் ஆசிய பசுபிக் அனர்த்த நிவாரண நிதியத்திலிருந்து வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாரிய உயிர்ச் சேதங்களும், சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியம் முழுவதும் உள்ளடக்கிய, நெகிழ்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி சிக்கலான சவால்களைத் தீர்க்க தனது உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றும் என தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |