செல்வம் அடைக்கலநாதனின் கருத்துக்கு கடும் விமர்சனம்
“செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன எனக் கூறுவது அவரது அரசியல் கபடத்தனமாகவே பார்க்கப்படுகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பாக கூறுகையில், “வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள் அமைப்பதற்கு ஆதரவளித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்றைய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோயில் அமைக்கப்படுவதாக தெரிவித்து தனது அரசியல் கபடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சூழ்ச்சிகள்
கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழும் நிகழ்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வடக்கு கிழக்கில் மனித உடல் எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்தவிகாரைகள் அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
உண்மையில் கடந்த அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேன் என சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மக்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட கூட்டமைப்பினர் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அண்மிப்பதை கருத்தில் கொண்டு இவ்வாறான மக்களை ஏமாற்றுகின்ற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்ட இவர்களுக்கு சில சமயங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பதை இவர்கள் நன்கு அறிந்திருக்கக் கூடும். ஆதலால்தான் அவருடைய குறித்த அறிக்கை அதை படம்போட்டு காட்டுவதாக கருதவும் வாய்ப்பு உண்டு” என்றார்.