கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசருக்குப் பறந்த அவசர கோரிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 12 இன் விதிகளின்படி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலியான ஆவணங்கள்
கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ய அனுமதித்ததாகவும், இதற்கு போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த மோசடி தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பல சுகாதார அமைச்சு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2024 பெப்ரவரி 2 அன்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரம்புக்வெல்லவை கைது செய்தது. இந்தக் கைது சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்றது.
வெளிநாடு செல்ல தடை
இந்த இறக்குமதியால் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி நடந்ததாக விசாரணைகள் வெளிப்படுத்தியதுடன் இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் இயக்குநர், மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக பெர்னாண்டோ ஆகியோர் அடங்குவர்.
நீதிமன்றத்தால் பிணை
இந்தநிலையில், 2024 செப்டம்பர் 11 அன்று, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இரண்டு பேர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பிணை வழங்கப்பட்ட போது, ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் முடிவு செய்தது.
மேலும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
