சீனாவின் முகவர்களா தமிழ் தேசிய மக்கள் முன்னணி? கிழக்கிலிருந்து எழுந்த கேள்விக்கணை
நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே அப்போது நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள். எனவே 13 ஊடாக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்யும் இவர்களை தமிழ் மக்கள் விரட்டியக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிலே தற்போது அரசியல் பேசு பொருளாக 13 வது திருத்த சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் மிகவும் நடைபெற்றிருக்கின்றது. அந்த வகையில் 13 வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தவேண்டும், 13 சரத்தின் ஊடாக மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஒரு கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் வேண்டிநிற்கின்றன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இந்த 13 வது திருத்தத்தை அமுல்படுத்தவேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி தெரிவித்தன. ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29 ம் திகதி கைச்சாத்திட்டப்பட்டு கொண்டுவரப்பட்டது. இது வெறுமனவே தமிழர்கள் மீது உள்ள அக்கறை மூலமாக இந்தியாவால் கொண்டுவரப்பட்டது அல்ல பல தியாகங்கள் உயிரிழப்பு பல போராட்டங்கள் பல அழிவுகளின் பின்பு அந்த போராட்ட தியாகத்தின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இன்று நாங்கள் இருக்கும் நிலையை சிந்தித்து பார்க்கவேண்டும். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாங்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருந்தோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வந்த 13 வது திருத்த சட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைகளை பெறுவதற்காக போராடிய எமக்கு ஒரு இறுதி தீர்வாக நாங்கள் எந்த இடத்திலும் எவரிடமும் நாங்கள் கூறவில்லை.
தமிழ் ஈழம் வேண்டும் என போராடியவர்கள். எனவே 13 வது திருத்தச் சட்டம் மூலம் வந்த மாகாணசபை முறைமையை நாங்கள் இறுதி தீர்வாக எக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணயம் கூடிய தாயகத்தை நாங்கள் ஆளக்கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு தான் எமக்கான இறுதி தீர்வாகும்.
2009 ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் ஈழம் இந்தா மலரும், அந்தா மலரும் என்ற ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம் அந்த காலகட்டத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட இன்னும் தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கக் கூடிய ஒரு சில ஒப்பந்தங்கள் வந்திருந்தும் கூட நாங்கள் தனிநாட்டை எதிர்பார்த்து அவைகளை கூட நிராகரித்தோம்.
ஆனால் 2009 மே 18 க்கு பின்பு தமிழ் மக்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றோம் என சிந்தித்து பார்க்கவேண்டும். தற்போது வடக்கு கிழக்கு நில தொடர்பை நிரந்தரமாக பிரிக்க பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் வடக்கு கிழக்கில் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக எல்லைப்புறம் ஊடாக பெரும்பான்மை மக்களை குடியேற்றிவருகின்றது.
13 வது திருத்தச் சட்டத்துக்கு ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது. அமுல்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மீளபெறப்பட்டிருக்கின்றது. புதிய அரசியல் அமைப்பு 3 மாதத்தில் வரவிருக்கின்றது.
அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச வந்த பின்பு உரையாற்றும் அனைத்து இடங்களிலும் இந்த நாடு ஒரு பௌத்த நாடு அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கின்ற ரீதியில் பேசிவருகின்றார்.
எனவே புதிய அரசியல் அமைப்பில் எங்களுக்கான தீர்வு வரும் என எதிர்பார்க்வில்லை . தமிழ் தேசிய மக்கள் முன்னணி எங்களை இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்றனர் அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்ப்பதைத்தானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள்.
கோட்டாபயவை எதிர்த்து சஜித் பிரேமதாஸ் கடந்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டார் அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மைத்திரி பால சிறிசேன போட்டியிட்டார் இந்த ராஜபக்ஷ சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அட்டூழியங்கள் அநியாயங்கள் அழிப்புக்களை எதிர்த்து அவர்களை தேற்கடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய பரப்பிலே உள்ள அனைத்து கட்சிகள் அனைத்து மக்களும் வீறு கொண்டு எழுந்தபோது தேர்தலை பகிஷ்கரிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள் அப்டியென்றால் நீங்கள் மறைமுகமாக யாருக்கு உதவி செய்ய நினைக்கின்றீர்கள்?
இன்று சீனா யாழ்ப்பாண கரையோரத்தில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கின்றது இந்த நிலையில் நீங்கள் அதை எதிர்க்கவில்லை. சீனாவை பெறுத்தமட்டில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்குமே மனித உரிமைகள் மீறல்களுக்கும் எதிராகவே குரல்கொடுத்த வரலாறு இல்லை.
எனவே நாங்கள் எக்காரணம் கொண்டும் சீனாவை ஆதரிக்க முடியாது எமக்கு இருக்கும் அண்டை நாடான இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் மாத்திரம் அல்ல இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உண்டு தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக அகலபாதாளத்தில் இருக்கின்ற நிலையில் இந்தியா உதவி செய்துவருகின்றது.
1971 ம் ஆண்டு ஜே வி பி கிளர்ச்சியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது அதேபோன்று விடுதலைப் போராட்டத்துக்கு எந்தளவு உதவி செய்ததோ அந்தளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 2009 இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது. அதற்கு பின்பு வடக்கு கிழக்கிலே பல அபிவிருத்திதிட்டங்களுக்கு உதவி செய்தது மலையகத்தில் ஆயிரக்கனக்கான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது தற்போது இலங்கையை பொருளாதாரத்தில் இருந்து மீட்பதற்கு பல உதவிகளை செய்துவருகின்றது.
எனவே இந்த நேரத்தில் நாங்கள் இந்தியாவை பயன்படுத்த வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு கடமையுண்டு. 13 திருத்தசட்டம் முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் இருப்பையாவது காப்பாற்றி கொள்ளலாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு இதைவிடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 13 திருத்த சட்டம் வேண்டாம் ஆனால் அதற்கு ஊடாக அதிகாரமற்ற மாகாணசபை தேர்தல் வந்தால் கூட போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.
எனவே தமிழ் மக்கள் எதற்காக போராடினோமோ அந்த இலக்கை அடையவில்லை இருந்தும் சமஷ்டியை பெறுவதற்காக நாங்கள் பேராடுவோம். அதுவரை எமக்கு எமது இருப்பை காப்பாற்றுவதற்கு முழு அதிகார பரவலுடன் 13 வது திருத்த சட்டம் வேண்டும்.
எனவே 13 திருத்தச் சட்டம் ஊடாக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்ய அதற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டசீனாவின் முகவர்களா? தமிழ் தேசிய மக்கள் முன்னணித்தினை உண்மையான தமிழ் தேசியத்தை விரும்பும் தமிழ் மக்கள் அதனை எதிர்க்கவேண்டும் அவர்களை விரடியடிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
