ஓமானுடன் கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ள சிறிலங்கா!
சிறிலங்கா மற்றும் ஓமானிற்கு இடையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றே எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக சிறிலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு கோட்டாபாய ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
இதனால் ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோல் 18 ரூபாவினாலும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையிலேயே எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக கடன் ஒப்பந்தமொன்று ஓமானுடன் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 5 வருட சலுகைக் காலத்துடன் 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் தேவைக்காக மாதமொன்றுக்கு 350 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும், தற்போது கொள்வனவு செய்யவுள்ள எரிபொருளானது ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.