அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம்: CEO-வின் அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கை தொடர்பில் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கமளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.
இதில், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்ததில் பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க 241 பேர் உயிரிழந்தனர்.
கருப்பு பெட்டி
இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்த தரவுகள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
இதனடிப்படையில், கடந்த ஜூலை 12 ஆம் திகதி முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB ) வெளியிட்டது.
இதில், விபத்திற்கு விமானிகள் தான் காரணம் என்பது போல் அறிக்கை உள்ளதாக தெரிவித்து இந்திய விமானிகள் சங்கம் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மூச்சுப் பரிசோதனை
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில் விமான இயந்திரங்களில் அல்லது பராமரிப்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை.
அனைத்து கட்டாய பராமரிப்புப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு, எரிபொருளின் தரத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
விமானிகள் தங்கள் கட்டாய முன்-பயண மூச்சுப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றனர் அத்தோடு அவர்களின் மருத்துவ நிலையிலும் எந்த பிரச்சினை இல்லை.
விரிவான விசாரணை
ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் சோதனை செய்யப்பட்டதில், அவை அனைத்தும் சேவைக்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டது.
முதற்கட்ட அறிக்கையில், விபத்துக்கான எந்த காரணமும் அடையாளம் காணப்படவில்லை எந்த பரிந்துரைகளும் இல்லை.
விசாரணை இன்னும் முடிவடையாததால், அனைவரும் எந்தவித முன்கூட்டியே முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
முழுமையான மற்றும் விரிவான விசாரணையை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் விசாரணை அதிகாரிகள் பெற்றிருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைப்போம்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

