யாழ். மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் யாழ்ப்பாண மாநகர சபைக்கு (Jaffna Municipal Council) உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மாநகர சபைக்கு அறிவுறுத்தல்
குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகளிடம், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார்.
அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி, இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
