யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
அதன்படி, காற்று தரச் சுட்டெண் அளவு யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான 186 ஆக பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 170 ஆகவும், சிலாபத்தில் 164 ஆகவும், அனுராதபுரத்தில் 165 ஆகவும் பதிவாகியுள்ளது.
குறித்த விடயம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதகமான தாக்கங்கள்
மேலும், பத்தரமுல்லையில் 166 ஆகவும், திருகோணமலையில் 156 ஆகவும், அக்கரைப்பற்றில் 154 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த அனைத்து இடங்களும் 'ஆரோக்கியமற்ற' (Unhealthy) வகைக்குள் அடங்குவதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான சுகாதார தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, எல்ல பகுதியில் காற்று தரச் சுட்டெண் அளவு 101 ஆகப் பதிவாகி சற்று ஆரோக்கியமற்ற வகையிலும், இரத்தினபுரி பகுதியில் 96 என மிதமான காற்றுத் தர நிலையிலும் பதிவாகியுள்ளன.
மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஆறு முக்கிய காரணிகளின் செறிவின் அடிப்படையில் காற்றின் தரம் மதிப்பிடப்படுகிறது.
காற்று தரச் சுட்டெண் மட்டங்களைக் கண்காணிப்பது சாத்தியமான சுகாதார அபாயங்களை அடையாளம் காண உதவுவதுடன், சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறது.
காற்று தரச் சுட்டெண்
காற்று தரச் சுட்டெண் வகைப்பாட்டின்படி, 0 முதல் 50 வரையிலான அளவீடுகள் நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரையிலான நிலைகள் மிதமானது என்றும் கருதப்படுகின்றன.

101 முதல் 150 வரையிலான அளவீடுகள் சற்று ஆரோக்கியமற்ற வகைக்குள் வருவதுடன், 151 முதல் 200 வரையிலான மதிப்புகள் ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், 201 முதல் 300 வரையிலான நிலைகள் மிகவும் ஆரோக்கியமற்றவை எனக் கருதப்படுவதுடன், 301 முதல் 500 வரையிலான அளவீடுகள் ஆபத்தான வகைக்குள் அடங்குகின்றன.
குறிப்பாக காற்று மாசு அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாத்தியமான சுகாதார தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |