நாட்டின் அதிகாரம் படைத்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் அஜித் நிவாட் கப்ரால்
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு(Ajith Nivat Cabral) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவி 5ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதியரசர் 5. a. எதிர்க்கட்சித் தலைவர் b. அமைச்சரவை அமைச்சர் c. பீல்ட் மார்ஷல் d. மத்திய வங்கி ஆளுநர் என தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியானது, 20ஆவது உயர் பதவியாக தரப்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்க உயர் பதவி படிநிலையானது, சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகளில் உரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆயினும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய, இத்தர நிலைகளில் இல்லாத அலுவலருக்கோ அல்லது நபருக்கோ உரிய அந்தஸ்தை வழங்க முடியும். அந்த வகையில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் 5ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால், எம்.பி. பதவியிலிருந்து விலகி, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, குறித்த பதவி அமைச்சரவையின் அதிகாரங்களுக்கு நிகராக இருக்க வேண்டுமென கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.