நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய கப்ரால்! தீவிரமடையும் கிரேக்க பிணைமுறி விசாரணை
கிரேக்க அரச பிணைமுறி முதலீட்டு விவகாரம் தொடர்பாக, தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கைச் சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீட்டு மனுவை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீளபெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றில் இந்த வழக்கனது தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளதால், மேன்முறையீட்டு மனுவை மீள பெறுவதாக அஜித் நிவர்ட் கப்ரால் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
அரசாங்கத்துக்கு நிதி இழப்பு
இந்த மனுவைப் பரிசீலிப்பதற்காக மேல் நீதிமன்றம் இன்று (09) திகதியை நிர்ணயித்திருந்தது. முன்னதாக, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி ஷானில் குலரத்ன, குறித்த மனு தொடர்பான அறிவித்தல் முந்தைய நாளிலேயே தமக்குக் கிடைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, சட்ட ரீதியான விடயங்களை ஆராய்ந்து வாதங்களை முன்வைப்பதற்குப் போதிய கால அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, மனுவை ஒக்டோபர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2012ஆம் ஆண்டு கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்துக்குச் சொந்தமான சுமார் 1.84 பில்லியன் ரூபாவை கிரேக்க அரச பிணைமுறிகளில் முதலீடு செய்து அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஆரம்பத்தில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
பின்னர், அந்தக் குற்றப்பத்திரிகையைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் வேறு சில பிரிவுகளின் கீழ் கொழும்பில் உள்ள நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்தது. ஒரே விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நீதித்துறை அதிகார வரம்புகளின் கீழ் வழக்குத் தொடர்வது சட்டவிரோதமானது எனச் சுட்டிக்காட்டி அஜித் நிவர்ட் கப்ரால் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
ஆரம்பக்கட்ட ஆட்சேபனை
எனினும், அந்த ஆட்சேபனைகளை மூவரடங்கிய நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்து, வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்தது.
தனது ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி, குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி அஜித் நிவர்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனு மீள பெறப்பட்டுள்ள நிலையில், கிரேக்கப் பிணைமுறி விவகாரம் தொடர்பான வழக்கில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவிக்கவுள்ள உத்தரவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |