கிழக்கின் ஆளுநருடன் அலி ஸாஹிர் மௌலானா சிநேகபூர்வ சந்திப்பு
கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிய ஆளுநருக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்ததுடன், தன்னுடனான நீண்டகால நட்பினையும், கிழக்கிலே மாகாண சபை பிரதிநிதிகளைக் கொண்ட சபை இயக்கத்தில் இல்லாத தருணத்தில் அதில் அனுபவத்தை கொண்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கின் ஆளுநராக கிடைத்துள்ளமைக்காக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புதிய ஆளுநர்

புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு கிழக்கிலே மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் மக்கள் சார்பிலே தெரிவித்தார்.
பல்வேறு மக்கள் சார் விடயங்கள் , மாகாண நிர்வாக செயற்பாட்டிலே நீண்டகாலமாக கிடப்பிலே உள்ள சில விடயங்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்திற்கு அலி சாஹிர் மௌலானா கொண்டு வந்ததை அடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு செயலாளர்கள் , விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதுடன் தீர்வுகளையும் , துரிதமாக அடுத்த கட்ட நகர்வுகளையும் முன்னெடுக்குமாறு பணிப்புரையையும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானால் விடுக்கப்பட்டது.
அனைவரையும் அனுசரித்து பேதங்கள் அற்ற முறையில் தனது பதவிக்காலத்தினுள் கிழக்கிலே வினைத்திறனுடன் பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுடன் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் நழீம் , மற்றும் செய்யிட் அஹமட் ஸாஹிர் மௌலானா ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.