பஞ்ச இரதமேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த மாவைக் கந்தன்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று (11) காலை முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூசை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.
அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்
இந்த திருக்காட்சியை காண்பதற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.

இன்றைய தினம் பக்தர்கள் காவடிகள், அங்கபிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை எடுத்துவந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் நடைபெறவுள்ளது.
ஆடி அமாவாசை தினத்தில், தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன்களை நிறைவேற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.
கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


