பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சியா! மறுக்கிறது இலங்கையின் கடற்படை
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலுடன் இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலானது நாளை 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் உத்தியோகபூர்வ துறைமுக அழைப்புகளை மேற்கொண்ட பின்னர், தீவை விட்டுப் புறப்படும் போது, இலங்கை கடற்படையினர் வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சிகளை செயற்படுத்தியுள்ளனர்.
செய்திகள் பொய்யானவை
வெளிநாட்டு கடற்படைகளுடன் கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதே இந்த நோக்கமாகும். ஆகவே இது குறித்து ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்திகள் பொய்யானவை என கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கு முன்னர் பல தடவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதேபோன்ற கடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோன்ற பயிற்சிகளின் ஒரு பகுதியாக, தைமூர் மற்றும் இலங்கையின் சிந்தூரலா கடற்படை கப்பல் என்பன பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
