கொழும்பு மாணவன், மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்: புதிய கோணத்தில் விசாரணை
கொழும்பு (Colombo) சொகுசு கட்டடமொன்றின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் மற்றும் மாணவியின் கையடக்க தொலைபேசியில் பொருத்தப்பட்டுள்ள சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி அழைப்பு தரவு பதிவுகளை காவல்துறையினருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உயிரிழந்த மாணவன் மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசி தரவு பதிவேடுகளை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்களுடைய நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் முறைப்பாட்டை கையாண்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, பாகிஸ்தான் மாணவனின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற போதும் மாணவனின் தந்தை உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி என்பதனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, மாணவனின் தந்தைக்கு தூதுவர் சிறப்புரிமைகள் இருக்கிறதா என்பதை விசாரித்து, உரிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |