உலகின் மிக நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்ட கடிகாரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா!
இன்றைய 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட கண்டுபிடிப்புக்களுடன் நாளுக்கு நாள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில், விநாடி, நிமிடம், மணித்தியாலம், நாள், மாதம், வருடம் என காலத்தை மனிதன் எண்ணிக்கழித்துக் கொண்டிருக்கையிலே ஆயிரம் ஆண்டுகளை சுவீகரிக்கும் வகையில் பிரம்மாண்டமான கடிகாரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நிறுவனமான அமேசன் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அண்மையில் அறிவித்துள்ளது.
ஒன்றல்ல இரண்டல்ல பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடியவாறு இந்தக் கடிகாரம் இருக்குமென அமேசன் நிறுவனத்தின் நிறுவுனர் ஜெப் பசோஸ் தெரிவித்துள்ளார்.
பத்தாயிரம் ஆண்டுகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய திறன் கொண்டதாக அமைந்துள்ள இந்தக்கடிகாரம் மிகவும் பிரம்மாண்டமாக 500 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அமேசன் நிறுவுனருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் இந்தக் கடிகாரம் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 350 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்படுகின்ற இந்தக் கடிகாரத்தின் உருவாக்கத்திற்கான திட்டத்தினை டேனி ஹில்லிஸ் என்ற அறிவியலாளர் என்பவர் முன்மொழிந்துள்ளார்.
உலகில் மிகநீண்ட ஆயுள் காலத்தைக் கொண்டதாக கருதப்படுகின்ற இந்த கடிகாரத்திற்கு க்லொக் ஒப் தி லோங் (Clock of the Long) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும், அதாவது ஒரு வருடம் என்பது இந்தக் கடிகாரத்தில் ஒரு நொடியாக அளவிடப்படுவதாகவும் இந்த மணியளவின் படி இந்தக் கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகவும்" அவர் தெரிவித்தார்.
காலம் கடந்தும் பேசப்படும்
மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும், இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கடிகாரத்தின் கட்டுமானப்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்ததன் பின்னர் மக்கள் பார்வைக்காக விடப்படும் என்றும் அப்போது அங்கு அதனைப் பார்வையிட வருபவர்களின் பெயர்களும் கடிகாரத்தைப்போல காலம் கடந்தும் பேசப்படும் என்றும் கடிகாரக் கட்டுமானத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என பலரும் இதன் போது கேள்வி எழுப்பிய போது, அதற்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைப்பதை நோக்காகக் கொண்டே இந்தக் கடிகாரம் கட்டப்படுவதாக குடித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்தக் கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே கேட்கும் என்ற நிலையில் அதனைக் கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் இந்த உலகில் உருவாகவில்லை என்பது தான்,
இதுவே இந்த அளப்பரிய கண்டுபிடிப்பின் மீதான ஆர்வத்தினைத் தூண்டும் கோளாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.