சம்பந்தமில்லாத பதாகை விவகாரம்: ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு செய்து காவல்துறை அராஜகம்
வவுனியாவில் விடுதலை புலிகளுக்கு சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் கார்த்தீபன் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை காவல்நிலையத்திற்கு மிக அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப்புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.
வழக்கு தாக்கல்
குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் நேற்றயதினம் (27.11) குறித்த பகுதிக்கு சென்று அங்கு நின்ற இருவரிடம் குறித்த பதாதைகளை அகற்றுமாறு தெரிவித்தார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா காவல்துறையினர் அவரை, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்ப்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை
கைது செய்யப்பட்டவர் இன்றையதினம் (28.11) நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளரும், வவுனியா ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் காவல்துறையினர் பக்கச்சார்பான முறையில் அதே வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னாள் போராளி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியருந்தமை குறிப்பிடத்தக்கது.