மன்னாரில் போதைப்பொருள்கடத்தலில் அம்புலன்ஸ் சாரதி : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தேகத்தின் பேரில்
முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதைப் பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை கடந்த சனிக்கிழமை (30) இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் வருகை தந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிக்கு கடித்து தாக்கி
இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் காவல்துறை அதிகாரிக்கு கடித்து தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி தப்பி ஓடியுள்ளதுடன் மற்றைய நபரை காவல்துறையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பிரச்சனைகளுடன் தொடர்புபட்ட அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் .
குறித்த சாரதி அம்புலன்ஸ் வண்டியில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு சென்ற வேளை காவல்துறையினரால் இடை மறிக்கப்படவில்லை. சாரதி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளார். அந்த சமயம் அம்புலன்ஸ் வைத்தியசாலையில் இருந்துள்ளது.
அம்புலன்ஸில் கடத்தப்படவில்லை
பின்னர் காவல்துறையினரால் வாகனமும் சாரதியின் விடுதியும் சோதனையிடப்பட்ட பொழுது அங்கு போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனடிப்படையில் சாரதி இன்று (2)எம்மால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த அம்புலன்ஸ் வண்டியின் சேவை இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டு இன்று எமது விசாரணைக் குழுவினாரால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. அதில் போதைப் பொருட்கள் எவையும் இருக்கவில்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் மேலும் தெரிவித்தார்.